Saturday, January 29, 2011

வேறு எங்காவது மீனவர் சாவது உண்டா?

    தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, துப்பாக்கி சூட்டில் பலியாவது போன்ற செய்திகளை படிக்கும்போது, மனம் வேதனைப்படுகிறது.அன்றாட வயிற்று பிழைப்புக்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது, ஏன் ஆயுத பிரயோகம் செய்ய வேண்டும்?நிலத்தை போல, கடலில் எல்லையை சரியாக வரையறுக்க முடியுமா? அப்படியே எல்லை தாண்டினாலும், எச்சரித்து அனுப்புவது மனிதாபிமானம். கைது செய்து விசாரித்து, தாய் நாட்டிடம் ஒப்படைப்பது, அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறை. அதைவிடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி, உயிருக்கும், உடமைக்கும் சேதமிழைப்பது, எவ்விதத்தில் நியாயம்?பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ, இந்திய மீனவர்கள் சுடப்படுவதாக செய்திகள் அதிகம் வருவதில்லை. பரஸ்பரம் நடவடிக்கைக்கு பின், சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதை காண்கிறோம். இங்கும் அதே நிலை வர வேண்டும். முன்னேறிய ஐரோப்பிய நாடுகள், ஒன்றிணைந்து, பகைமை பாராட்டாமல், அனைத்து துறைகளிலும் நவீன தொழிநுட்பத்தை புகுத்தி முன்னேறுகின்றன. அங்கும் மீனவர்கள் இருக்கின்றனர். ஆனால், உயிர்பலியோ, உடமை சேதமோ அங்கு இல்லை. எல்லை தாண்டாமலிருக்க, ஒவ்வொரு மீன் பிடி படகிலும், நவீன தகவல் தொடர்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளைப் போல வசதிகள் ஏற்படுத்தி, பரஸ்பர அமைதிக்கு வழிகோலினால், அமைதி ஏற்படும்; அநியாய உயிர்பலிகள் குறையும்.

No comments:

Post a Comment