Saturday, February 5, 2011

தோகா: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐ.சி.சி., கடும் தண்டனை விதித்துள்ளது. இதில், சல்மான் பட்டிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லார்ட்சில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் "ஸ்பாட் பிக்சிங் எனப்படும் கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தானின் சல்மான் பட், முகமது ஆமிர், முகமது ஆசிப் ஆகியோர் ஈடுபட்டதாக இங்கிலாந்து பத்திரிகை செய்தி வெளியிட்டது. சூதாட்ட புக்கிகளிடம் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு ஆமிர், ஆசிப் வேண்டுமென்றே "நோ-பால் வீசியது அம்பலமானது. இதற்கு, அப்போதைய கேப்டன் சல்மான் பட் ஒத்துழைத்ததும் தெரிய வந்தது. இப்பிரச்னையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) உடன் நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
பின் மைக்கேல் பெலாப் தலைமையிலான 3 பேர் அடங்கிய ஐ.சி.சி., தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. நேற்று கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த கூட்டத்தில் 9 மணி நேரம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இதில், மூன்று வீரர்களுக்கும் சூதாட்ட ஏஜன்ட்களிடம் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதால், கடும் தண்டனை விதிக்கப்பட்டது.
இது குறித்து வெளியிட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, ஒரு ஓவரில் ரன் எடுக்காமல் "மெய்டனாக அமையும்படி பேட் செய்யுமாறு சல்மான் பட் கேட்டுக் கொள்ளப்பட்டார். இவர் அவ்வாறு செய்யவில்லை. ஆனாலும், இது தொடர்பாக தன்னை சூதாட்ட ஏஜன்ட் மஜித் அணுகிய விபரத்தை ஐ.சி.சி., ஊழல் தடுப்பு குழுவுக்கு தெரிவிக்க தவறினார். ஆசிப், ஆமிர் ஆகியோர் சூதாட்ட ஏஜன்ட் சொன்னபடி வேண்டுமென்றே "நோ-பால் வீசியது தெரிய வந்துள்ளது. இதற்கு சல்மான் பட் ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
இதையடுத்து சல்மான் பட், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 10 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. இவர், வரும் காலங்களில் ஐ.சி.சி., விதிமுறைகளை மீறாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அளிக்கும் ஊழல் தடுப்பு தொடர்பான முகாமில் பங்கேற்கும் பட்சத்தில் 5 ஆண்டு விலக்கு அளிக்கப்படும்.
ஆசிப்பிற்கு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. இவரும் ஐ.சி.சி., வதிமுறைகளை மீறாமல் இருந்தால், 2 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும். முகமது ஆமிருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள மூன்று வீரர்களும், அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனாலும், இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment