Monday, February 21, 2011

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!


Tamil tops the series of languages digged-in? - Tamil Literature 
Ilakkiyam Papers  
                                                                                                                           சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.  

ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

No comments:

Post a Comment