Monday, February 7, 2011

மீனவர்கள் சாவும் முதலைக் கண்ணீரும்

"தமிழக மீனவர் படுகொலை: இலங்கை கடற்படை அட்டகாசம்' என்ற செய்தியை, கிட்டத்தட்ட அனுதினமும் படிக்க முடிகிறது. நாளிதழின் தேதியும், இறந்தவரின் பெயரும் தான் மாறுகிறதே தவிர, படுகொலைகள் நின்றபாடில்லை. வழக்கமாக ஒரு லட்சம் ரூபாய் நிதியும், மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் அனுப்பி, தன் கடமையை முடித்துக்கொள்ளும் தமிழக அரசு, இம்முறை ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது (கடந்த ஜூலையில் மூன்று லட்சம் கொடுத்த ஞாபகம்).

மத்திய அரசும் தன் பங்குக்கு கடுமை காட்டி, இலங்கைத் தூதரிடம் விசாரித்துள்ளது; இந்திய தூதரகத்தை அறிக்கை தரச் சொல்லியுள்ளது. எல்லாம், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலின் தயவு என்பதை யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை. "இதுக்குத் தான், சாகுறது கூட, தேர்தல் நேரமாப் பார்த்து சாகணும்' என கிண்டல் அடித்துள்ளார் நண்பர் எஸ்.ஆர்.சேகர்.

கிண்டல் அப்புறம்; சீரியஸ் இப்புறம்: கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததில் இருந்து தான் தமிழக மீனவர்கள் இப்படி ஜலசமாதி ஆக்கப்படுவது அடிக்கடி நடக்கிறது. அந்த முடிவே ஆயிரத்தெட்டு சர்ச்சைகளைக் கிளப்பியது. அதன் விளைவும், ஆயிரத்தெட்டு உயிர்களைப் பலி வாங்குகிறது. "தவறு நம் மீனவர்கள் மீது தான். அவர்கள் தான், எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்கின்றனர். சர்வதேச கடல் எல்லையோடு நிறுத்திக்கொண்டால் இந்தப் பிμச்னை இல்லை. எல்லையை அடையாளம் காட்டும் வகையில் ஒளிரும் மிதவைகள் வைக்கப்படும்' என்றெல்லாம் மத்திய, மாநில அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

மீனவர்கள் பலியாவது ஒரு சோகம் என்றால், சொந்த நாடே அதை நியாயப்படுத்துவது பெருஞ்சோகம். முதல்வர் கருணாநிதி கூட, "சில பேராசை மீனவர்கள், கடல் எல்லையைத் தாண்டுவதால் தான் இவ்வாறு நேர்கிறது' எனச் சொல்லி, ஜெயலலிதாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். எல்லாரும், எல்லை மீறும் தமிழக மீனவர்களை எச்சரிக்கின்றனறே தவிர, அதே மாதிரி அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் வரும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை மீனவர்கள் ஒரு முறையேனும் சுடப்பட்டதாக வரலாறு உண்டா என்பதைப் பற்றி வாய் திறப்பதில்லை.

பரம்பரைப் பகை நாடான பாகிஸ்தான் கூட, நம் மீனவர்கள் எல்லை தாண்டி அவர்களின் கடல் எல்லைக்குள் போகும்போது, கைது செய்து, விசாரணை நடத்தி, "எக்ஸேஞ்ச் ஆஃபரில்' விடுதலை செய்கிறதே தவிர, அப்பாவி மீனவர்களைச் சுட்டுக் கொல்வதில்லை. அவர்களுக்கு இருக்கும் இரக்கம் கூட இலங்கைக்கு இல்லாமல் போனது ஏன்?

விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்தபோதாவது, இத்தகைய சந்தேகக் கொலைகளில் ஒரு நியாயம் இல்லாவிட்டாலும், "லாஜிக்' இருந்தது. இப்போது என்ன கேடு? அதான், புலிகளை பூண்டோடு ஒழித்தாயிற்றே. சந்தடி சாக்கில் அப்பாவித் தமிழர்களையும் அடக்கம் செய்தாயிற்றே. இனியும் கூடவா தமிழக மீனவர்கள், தம் வயிற்றுப் பிழைப்புக்காக மீன்களைத் தேடக்கூடாது?

கடைசியாக கொல்லப்பட்டவர், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த பாண்டியன் (13.01.11). இவரே கடைசியாக இருப்பார் என சொல்வதற்கில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழக அரசுத் தரப்பிலும், இந்திய அரசுத் தரப்பிலும் காட்டப்படும் உறுதியின்மை தான். ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டால் முடிந்ததாக நினைக்கிறது தமிழக அரசு. ஒப்புகை கடிதம் அனுப்பிவிட்டால் முடிந்ததாக நினைக்கிறது மத்திய அரசு. இந்தக் கடிதக் காமெடி தொடரும் வரை, மீனவர் படுகொலையும் தொடரத்தான் செய்யும்.

அதேசமயம், இந்திய அரசு என்ன உறுதியான உருட்டல், மிμட்டல் விடுத்தாலும் அஞ்சும் நிலையில் இன்றைய இலங்கை அரசு இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு காரணமும் இவர்களின் அரை குறை நிலைப்பாடு தான். போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவோ, இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ எந்த ஓர் உறுதியான நிலைப்பாடும் எடுக்காமல், கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை என்பது போல், மழுப்பியது மத்திய அரசு. பலன்: நம் பரம வைரிகளான சீனாவும், பாகிஸ்தானும் நேரடியாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்யத் தொடங்கின. இன்று, இலங்கைத் துறைமுகங்களின் உள்கட்டமைப்பு வரை வேர் பாய்ச்சி நிற்கிறது சீனா. எதுவும் செய்ய முடியாமல், அதை வேடிக்கை பார்க்கிறது இந்தியா.

ஒருவேளை தமிழக மீனவர் பிரச்னையில் இந்தியா முறைத்தால், "போய்யா வேலையைப் பார்த்துக்கிட்டு' என பதில் வந்தாலும் வியப்பதற்கில்லை. கிட்டத்தட்ட இதே பதிலை, அண்ணன் மகிந்த ராஜபக்ஷேவின் சகோதரர் பசில் ராஜபக்ஷே, போரின்போதே சொல்லிவிட்டார்; திரும்பவும் சொல்லத் தயங்க மாட்டார். அதனால் தான், காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு ராஜபக்ஷேவை அழைத்து தாஜா செய்துகொண்டது இந்தியா.

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் பழக்கமான விஷயங்கள். அவர்களைப் பொறுத்தவரை, மீனவர் சாவு என்பது, உயிரிழப்பு இல்லை; தேர்தல் நேரத்தில் நடந்துவிடக்கூடாத ஓட்டிழப்பு; அவ்வளவே!

No comments:

Post a Comment