Monday, February 7, 2011

தமிழ் வளர்ப்பும் பிரதமர் புறக்கணிப்பும்

தமிழக முதல்வர் கருணாநிதியின் தமிழார்வம் அனைவரும் அறிந்ததே. இந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொன்னதோடு மட்டுமில்லாமல், அதிகாலை முதலே வரிசை கட்டி வந்த அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகளின் வாழ்த்துக்களையும் சலிக்காமல் வாங்கிக்கொண்டார். உண்மையான தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் தேதியிலோ, இவரே உருவாக்கிய புத்தாண்டான தை முதல் தேதியிலோ இப்படி வரிந்துகட்டி தலைவர்கள் வாழ்த்துச் சொன்னதாக என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

இப்படி வளர்த்தால் போதாதென்று, சினிமா கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்களை நூலாக தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சிக்கும் சென்று, தமிழ் வளர்த்தார். அங்கு தான் ஆரம்பித்தது பிரச்னை. "கவிஞரை வாழ்த்தச் சென்றவர், பிரதமரை வரவேற்கச் செல்லாதது ஏன்' என்ற சர்ச்சை எழுந்தது.

"ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியின் காரணமாக, பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை' என முதல்வர் பேட்டியளித்தார். உண்மை அது தானா?

இந்தியாவின் நம்பர் ஒன் வி.ஐ.பி., என்பதால் மட்டுமின்றி, இசட் பிரிவு பாதுகாப்பிலும் இருப்பதால், பிரதமரின் நிகழ்ச்சிகள் வெகு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. முக்கிய பிரமுகர்களின் இறப்பு போன்ற ஒன்றிரண்டு அரிதான நிகழ்வுகள் தவிர, மற்ற அனைத்தும் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடும்.

அந்த வகையில் தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் சென்னை விஜயமும் அமைந்தது. இந்திய அறிவியல் சங்கத்தின் 98வது மாநாட்டை துவக்கிவைக்க பிரதமர் ஒப்புக்கொண்டார். அதே நாளில், அடையாறில் அமைந்துள்ள பூங்காவையும் திறப்பதாக ஏற்பாடு. எல்லாம் முடிந்து, எங்கே கல்வெட்டு வைப்பது, என்பது வரை தீர்மானித்தாகிவிட்டது.

இரண்டு நாட்கள் முன்பு ஓர் இரவில் திடீரென, டில்லியில் இருந்து வந்தது ஓலை. பூங்கா திறப்பில் பிரதமரால் பங்கேற்க முடியாது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், அவர்களுக்கே வெளிச்சம். இரவோடு இரவாக தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. "மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால், பூங்கா திறப்பு தள்ளிப்போகிறது.'

மறுநாள் காலையில் செய்தித்தாள் படித்த அத்தனை பேர் புருவமும் உயர்ந்தது. பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் அமைச்சகமாவது, அனுமதி கொடுக்காமல் இருப்பதாவது. இத்தனைக்கும், அது ஒன்றும் அணு உலை அல்ல; பூங்கா!

"அமைச்சகம் அனுமதி தராதது ஏன்? அனுமதியே வாங்காமல் பிரதமரை அழைத்தது ஏன்? வெறுமனே விண்ணப்பம் மட்டும் கொடுத்துவிட்டு, தூங்கிவிட்டதா தமிழக அரசு? சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என, தமிழக அரசுக்குத் தெரிவதற்கு முன், பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிந்தது எப்படி?' என்பவை எல்லாம் விடை தெரியாத வினாக்கள்.

சரி, அதுதான் போகட்டும். பூங்கா திறப்பு இல்லை என்றாகிவிட்டது. மாநாட்டுக்கு மட்டும் பிரதமர் வருவதும் உறுதியாகிவிட்டது. மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில், தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க வேண்டியது கருணாநிதியின் கடமை அல்லவா? "மன்மோகன் சிங்கை வரவேற்பதைத் தவிர்ப்பதற்காகவே கொடநாடு சென்றார்' என, ஜெயலலிதாவை விமர்சித்ததும் இவர் தான் அல்லவா?

அதை எல்லாம் மறந்துவிட்டு, துணை முதல்வரை அனுப்பிவிட்டு, வைரமுத்துவின் பாடல்களை வெளியிடச் சென்றது சரி தானா? இரவு 7.45க்கு பிரதமர் சென்னை வந்துவிட்டார். அவரை வரவேற்ற பிறகு, 8 மணிக்கு புத்தகத்தை வெளியிட்டால், வைரமுத்து மறுத்திருப்பாரா? ஏர்போர்ட்டுக்கும் ராஜ்பவனுக்கும் இடையில் தானே இருக்கிறது, நிகழ்ச்சி நடந்த லீ ராயல் மெரிடியன் ஹோட்டல்!

அது கூட வேண்டாம். புத்தகத்தை வெளியிட்ட பிறகாவது, ராஜ்பவன் சென்று பிரதமரைச் சந்தித்திருக்கலாம் அல்லவா? அப்படி சந்திப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்ததால் தானே, பிரதமரின் நிகழ்ச்சி நிரலில், "இரவு 8.30 மணி: ரிசர்வ்டு' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதும் சந்திக்கவில்லை என்றான பிறகு தான், "தி.மு.க., காங்கிரஸ் உறவு கதம் கதம்' என வதந்திகள் வலுப்பெற்றன. அதன் பிறகே, துணை முதல்வர் ஸ்டாலின் தூது சென்றதும், முதல்வர் சம்மதித்ததும், மறுநாள் காலை 8.30க்கு பிரதமரைச் சந்திப்பதும் முடிவானது.

அதை அப்படியே வெளியே சொல்ல முடியாதல்லவா? அதனால் தான் அரசுத் தரப்பில், "வைரமுத்து நிகழ்ச்சியில் பங்கேற்றதால் முதல்வருக்கு கிறுகிறுப்பு வந்துவிட்டது; முதுகு வலி; அதனால் தான் பிரதமரைச் சந்திக்கவில்லை' என விளக்கம் சொல்லப்பட்டது.

அதுவே உண்மையாக இருந்தால், நிகழ்ச்சி முடிந்ததும் மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ அல்லவா முதல்வர் சென்றிருக்க வேண்டும். அவர் சென்ற இடம், புதிய தலைமைச் செயலகம் ஆயிற்றே. மேலும், "பிரதமரை வரவேற்க நான் செல்லவில்லை' என்பதை, நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலே பெருமையாகக் குறிப்பிட்டார் முதல்வர்.

"அப்படியானால், இது திட்டமிட்ட புறக்கணிப்பு தானே' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா சொல்வாரோ, என்னவோ... நான் சொல்லவில்லை!

No comments:

Post a Comment