Monday, February 7, 2011

தனியார் காப்பீடுகளின் நிஜமுகம்

தனியார் துறையும், பொதுத்துறையும் காப்பீட்டு நலத்திட்டங்களில் எந்த அளவுக்கு நன்மைகள் செய்கின்றன என்பது நெசவாளர் நலத்திட்டங்கள் மூலம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.  தனியார் பன்னாட்டு நிறுவனமான "ஐசிஐசிஐ ஆரோக்கிய காப்பீடு' திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் படி 2008-2009-ம் ஆண்டு வரையில் 2,89,023 நெசவாளர்கள் மத்திய, மாநில அரசுகளால் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.  நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து ஓரளவு காப்பாற்றும் திட்டமாக மத்திய, மாநில அரசுகளால் 2005-2006-ம் ஆண்டு முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.  நெசவாளர்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகள், உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ. 781.60 பைசா செலுத்துகின்றன. இதன்படி இத்திட்டத்தில் உள்ள உறுப்பினருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தாருக்கோ ஏற்படுகிற நோயின் தன்மைக்கேற்ப ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் வரை மருத்துவ உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன், ரூ. 7,500 வரை வெளி நோயாளிகளாக இருப்பவர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இத்திட்டம் கூறுகிறது. இத்திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு "பணமில்லா அட்டை' என அச்சடிக்கப்பட்ட லோம்பார்டு கார்டு வழங்கப்படுகிறது.  சமீபத்திய தகவலின்படி தேசிய அளவில் 2.24 கோடி உறுப்பினர்களுக்கு லோம்பார்டு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. மிகப்பெரும் தொகையை ஆண்டுதோறும் சந்தாவாகப் பெற்ற இந்நிறுவனம் திட்டத்தில் கூறியுள்ளபடி மருத்துவ உதவி செய்வதில்லை!  தனியார் நிறுவனங்கள் என்றாலே முதலில் லாபம், பிறகுதான் சேவைகள் என்பது பால பாடமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் ஐசிஐசிஐ நிறுவனம் அப்பட்டமாக நெசவாளர்களை ஏமாற்றி வருகிறது. சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்று ஊசி போட்டு மருந்துகளை வாங்க ரூ. 500 செலவாகிறது என்றால், அதனை லோம்பார்டு நிறுவனம் மூலமாகப் பெற மருத்துவரிடம் அதற்கென உள்ள கிளைம் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு, மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்துக்கும் மருத்துவரின் சான்றொப்பமிட்டு லோம்பார்டு நிறுவனத்தின் களப்பணியாளர்களிடம் கிளைம் படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. களப்பணியாளர்களும் ஆவணங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து அதன் பின்னரே தங்களது நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.  எல்லாம் சரியாக நடந்துவிட்ட திருப்தியில் உதவித்தொகை கிடைக்கும் என நெசவுத் தொழிலாளி காத்திருந்தால் ""படிவம் பெற்றுக்கொள்ளவில்லை'' என்று கணினி மூலம் தட்டச்சு செய்த கடிதம் கூறுகிறது.  பயனாளிகள் அளிக்கக்கூடிய கிளைம் படிவங்கள் சரியாக இருக்கிறது என்பதால்தான் களப்பணியாளர்கள் லோம்பார்டு நிறுவனத்துக்கு அனுப்புகின்றனர். ஆனால், லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம் பொய்களைச் சொல்லி மருத்துவ உதவிகளை நிராகரிக்கிறது!.  ரூ. 500 பெறுவதற்கு மருத்துவரிடம் கால்கடுக்க நின்று கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்த நெசவாளி லோம்பார்டு காப்பீட்டு நிறுவனத்தின் உதவி போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு சோர்வடைந்து போகிறான். சில கிளைம்களுக்கு அதிசயமாகப் பணம் வந்துவிடுவதும் உண்டு. சில கிளைம்களுக்குப் பயனாளிகளின் இனிஷியல் மாற்றி எழுதுவது போன்றவற்றால் காசோலைகள் மாற்றப்படாமல் திரும்ப அந்நிறுவனத்துக்கே அனுப்பப்பட்டு அவை மாதக்கணக்கில் திரும்புவதில்லை. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பிரிமீயத் தொகைகளை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து ஐசிஐசிஐ காப்பீட்டு நிறுவனம் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.  இதே காலகட்டத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நெசவாளர்களுக்காக ""மகாத்மா காந்தி புங்கர் பீம யோஜனா'' என்கிற நலவாழ்வு திட்டம் ஒன்றைத் தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகாலமாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது.  இதன்படி மத்திய அரசின் பங்காக நெசவாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ. 150, இந்திய ஆயுள் காப்பீட்டு கழக பங்காக ரூ. 100 , நெசவாளர் சார்பில் மாநில அரசே கடந்த 2004-2005 ஆண்டு முதல் ரூ.80-ம் செலுத்தி வருகிறது. மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு நெசவாளர் கணக்கில் ஒருவருக்கு ரூ. 330 பெற்றுக்கொள்ளும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனது திட்டத்தில் கூறியுள்ளபடி மிகச் சரியான முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேர்ந்த நெசவாளர்களது குடும்ப மாணவ, மாணவியருக்கு 9- முதல் 12-ம் வகுப்புவரையில் ஒவ்வோர் கல்வியாண்டிலும் ரூ. 1,200 வழங்கப்படுகிறது. இதோடு 60 வயதுக்குள் இறக்க நேரிட்டால் ரூ. 60,000 அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.  தமிழகத்தில் மட்டும் இத்திட்டத்தில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயனடைந்து வருகின்றனர்.  இத்திட்டத்தில் உதவிகள் பெற சற்று காலதாமதம் ஆகிறதே தவிர, விண்ணப்பித்த அனைவருக்கும் முறையாகப் பண உதவி வந்து சேருகிறது. லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம்போல விண்ணப்பங்களை நிராகரித்து ஏமாற்றுவது கிடையாது.  எல்.ஐ.சி. என்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மக்களின் சொத்து மட்டுமல்ல, அது இந்த தேசத்தின் சொத்து! லாப நோக்கம் கருதாமல் மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே பின்பற்றுகிறது!  லாப நோக்கம் மட்டுமே தனியார் துறைகளின் லட்சியம் என்பதால் லோம்பார்டு காப்பீட்டு நிறுவனம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. மத்திய அரசின் பங்களிப்பு நிதி இல்லாமல், தமிழக அரசு நடத்தும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டமும், ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் நிறுவனம் மட்டுமே லாபம் பார்க்கிற திட்டமாக மாறியிருக்கிறது. இதைத்தான் கடந்த ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்கிறது!  ஸ்டார் ஹெல்த் என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு தமிழக அரசு முதலாம் ஆண்டில் ரூ. 628.20 கோடி செலுத்தியிருக்கிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகள் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செலுத்தியிருக்கிற தொகை ரூ. 415.43 கோடிதான்! அதாவது மக்களின் வரிப்பணம் தமிழக அரசே முன்வந்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 200 கோடி லாபமாக வழங்கியிருக்கிறது! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 100 கோடி செலவில் இதே தமிழக அரசு திருவாரூரில் மருத்துவ கல்லூரியைப் புதியதாகத் தொடங்கியிருக்கிறது.  இந்நிலையில் இரண்டாவது ஆண்டில் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 750 கோடி ஒதுக்கியிருக்கிறது! கலைஞர் காப்பீட்டு அட்டை யாருக்குப் பயன்படுகிறது என்பதை தமிழக அரசு யோசிக்க வேண்டும்.  வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில் வண்ணமயமாக கலைஞர் காப்பீட்டு விளம்பரத்தில் திடீரென ஒருவருக்கு நெஞ்சு வலி வரும்போது,கலைஞர் காப்பீட்டு அட்டையை காட்டினாலே உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என காட்டப்படும். இது விளம்பரத்துக்கு வேண்டுமானால் சுவையாக இருக்கும்! ஆனால் நிஜத்தில் நெஞ்சு வலியுடன் செல்லும் ஒருவர் காப்பீட்டுக்கு உள்பட்ட மருத்துவமனைக்குள் நுழைந்தால் குறைந்தபட்சம் ரூ. 25,000 கட்ட வேண்டும். நோயாளிக்கு எதனால் நெஞ்சு வலி வருகிறது, என்ன சிகிச்சை மேற்கொள்ளலாம் என்கின்ற பரிசோதனை செய்வது எல்லாம் நோயாளியின் பணத்தில்தான்!  பரிசோதனைக்குப்பிறகு இதய அறுவை சிசிச்சைதான் தீர்வு என மருத்துவர்கள் முடிவெடுத்தால் ரூ. 1 லட்சத்துக்குள் என்ன அறுவை சிகிச்சையோ அதை மட்டும் செய்து இரண்டொரு நாளில் நோயாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.  அதற்குப் பிறகு வரும் எல்லா விளைவுகளுக்கும் அந்த நோயாளியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்சிகிச்சை அவசியம் என்றால் அந்த நோயாளிதான் செலவழிக்க வேண்டும். இதுதான் உண்மை நிலை! இது எப்படி சாமானிய மக்களுக்கான உயர் சிகிச்சைத்திட்டம் என்பது தெரியவில்லை.  தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டும் மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியாளர்களுக்கும் பங்கு இருப்பதால்தான் எல்லா அவலங்களும் இடம்பெறுகின்றன. சட்டபூர்வமாக - விஞ்ஞான ரீதியாக ஊழல் நடக்கிறது.  

 psamp87@gmail.com

No comments:

Post a Comment